உலகக் கோப்பை கால்பந்து குரூப் ‘ஐ’ பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நேற்று பிரான்ஸ், செனகல் அணிகள் மோதின. முதல் பாதியில் செனகல் அணி பிரான்சுக்கு கடும் சவால் அளித்தது. ஆனால் 2வது பாதியில் பிரான்ஸ் அணி ஆட்டத்தின் வேகத்தை வெகுவாக அதிகரித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான கிலியன் எம்பாப்பே அதிரடியாக 2 கோல்களை அடித்து அசத்தினார். அதைத் தொடர்ந்து, மற்றொரு பிரான்ஸ் வீரர் பிராட்லி பார்கோலா, கோல் ஒன்று அடித்தார்.
இதனால், பிரான்ஸ் 3-0 என முன்னிலை பெற்றது. இறுதியில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் செனகல் வீரர் இப்ராகிம் எம்பாய் ஆறுதல் கோல் அடிக்க, பிரான்ஸ் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 27 வயதான எம்பாப்பே தனது ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜெர்மனியின் கெர்ட் முல்லருடன் (14 கோல்கள்) இணைந்துள்ளார்.
மற்றொரு போட்டியில் குரூப் ‘ஐ’ பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நார்வே, ஈராக் அணிகள் நேற்று மோதின. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் நார்வே அணியின் டேவிட் மோல்லர் வோல்ப் கொடுத்த கிராஸ் பந்தை பெற்றுக்கொண்ட ஹாலண்ட் முதல் கோல் அடித்தார். 39வது நிமிடத்தில் ஈராக்கின் அய்மென் ஹுசைன் தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
முதல் பாதியின் இறுதி நேரத்தில் ஹாலண்ட் தனது 2வது கோலை அடித்தார். 76வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய லியோ ஆஸ்டிகார்ட் ஒரு கோல் அடிக்க நார்வே 3-1 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஹாலண்ட் தலையால் முட்டிய பந்து ஈராக் வீரர் ஹுசைன் மீது பட்டு ‘ஓன் கோலாக’ மாற நார்வே 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் ஐ பிரிவில் நார்வே 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செனகலை வீழ்த்திய பிரான்ஸ் அணி 2வது இடத்திலும் உள்ளன.
அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் குரூப் ‘ஜெ’ பிரிவு லீக் ஆட்டத்தில், ஆஸ்திரியா, ஜோர்டான் அணிகள் மோதின. 20வது நிமிடத்தில், ஆஸ்திரியாவின் ரொமானோ ஷிமித் கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.
ஆனால், 2வது பாதி தொடங்கிய 5வது நிமிடத்தில் (50வது நிமிடம்) ஜோர்டானின் அலி ஓல்வான் கவுண்டர் அட்டாக் மூலம் கோல் அடித்து 1-1 என ஆட்டத்தை சமன் செய்தார்.
இதன் பின்னர், ஆட்டம் ஆஸ்திரியாவின் பக்கம் திரும்பியது. மாற்று வீரராக வந்த மார்கோ அர்னாடோவிச் அடித்த கோல், விஏஆர் பரிசோதனையில் ஹேண்ட்பால் என அறிவிக்கப்பட்டு நடுவர்களால் மறுக்கப்பட்டது.
இருப்பினும், ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் ஆஸ்திரியா வீசிய கார்னர் பந்தை தடுக்க முயன்ற ஜோர்டான் டிபெண்டர் யாசன் அல் அரப், எதிர்பாராதவிதமாக பந்தைத் தனது அணியின் கோல் போஸ்ட்டிற்குள் தள்ளியதால் ஓன் கோல் ஆனது. இதனால் ஆஸ்திரியா 2-1 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஆஸ்திரியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச்செய்தார். இதன் மூலம், ஆஸ்திரியா உலகக் கோப்பை வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1990க்கு பின், தங்களது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.


