சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு சென்றுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது.
சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான திங்களன்று எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.13,600க்கும், சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800க்கும் விற்பனையான நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையானது.
இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680ம், கிராமுக்கு ரூ.2100ம் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, கிராம் ரூ.13,350க்கும், சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800க்கும் விற்பனையாகி வருகிறது.
அதே நேரம், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் கட்டி வெள்ளி விலை நேற்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்த நிலையில், இன்று கிலோவுக்கு ரூ.10,000 குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் கிராம் வெள்ளி ரூ.240க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இதன் மூலம், கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000, வெள்ளி விலை கிலோவுக்கு 15,000 ரூபாய் சரிவடைந்து விற்பனையாகி வருகிறது.


