தமிழக முதல்வராக விஜய் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக பேரவைக் கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரை மீதான உறுப்பினர்களின் விவாதம் நடந்தது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, ஆளுநர் உரையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மற்றும் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்து உரிய விளக்கங்கள் இல்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
அதன் பிறகு, பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கான பதிலுரையில் முதல்வர் விஜய் திமுகவையும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக தாக்கி பேசினார். இடையே குட்டிக்கதை ஒன்றை சொல்லியும், முடிவில் சபாநாயகரின் அனுமதி பெற்று உச்சகட்டமாக சைகை ஒன்றையும் செய்து முடித்திருந்தார்.
முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுவது நல்லதல்ல எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக முதல்வர் விஜய் மாற்றியதாக கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல்வர் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லிய விதம் எத்தனை பேரின் நம்பிகையை இழக்க செய்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் உதயகுமார், 35% மக்களின் வாக்குகளை பெற்றாலும், ஆட்சியமைக்கும் முன்பாக பிற கட்சிகளின் ஆதரவை பெற்று துக்ளக் தர்பார் நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது தவெக.
ஏராளமான மக்கள் நல திட்டங்களை பல ஆண்டுகாலமாக தமிழக மக்களுக்கு கொடுத்துள்ள சட்டமன்றத்தினுள் முதல்வர் விஜய் நேற்று கொடுத்த பதிலுரையின் போது, இங்க இருந்த அப்பாவை காணோம் என்று நடிப்பை வெளிப்படுத்திய விதம் எங்கே போனது தமிழக சட்டமன்ற மாண்பு!! என்ற கேள்வி பார்த்தோர் மனதில் எழாமல் இல்லை.
மாநில வளர்ச்சிக்கான பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்திய சட்டமன்றத்திலே நேற்று தமிழக முதல்வர் பதிலுரை என்ற பெயரில் வெளிப்படுத்திய கோமாளித்தனத்தை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்பதே புரியவில்லை.
மொத்தத்தில் முதல்வரின் கோமாளித்தனத்தை பார்த்து ஆச்சரியத்தில் அசந்து போனது நம் அன்னை தமிழ்நாடு என்று வெளுத்து வாங்கி உள்ளார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்.
அத்துடன் நில்லாமல், கான்ஃபிடன்ட்டா இருங்க நல்லதே நடக்கும் என்ற முதல்வரின் வசனத்தையே இங்கு நினைவுபடுத்தி, முதல்வரின் அதிரடி ஆக்ஷனை பார்த்து வேறு என்ன சொல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


