தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை தலைமைச்செயலக வளாகத்தில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய பேருந்துகளை ஆய்வு செய்த அவர் தனது தொகுதியான பெரம்பூர் செல்லும் பேருந்தில் பயணித்தார்.
முந்தைய ஆட்சியில் அரசுப் போக்குவரத்து கழகம் என்று மட்டும் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், விழுப்புரம் மற்றும் கும்பகோணம் ஆகிய 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் 300 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த 300 புதிய பேருந்துகளில் 164 டீசல் பேருந்துகள் மற்றும் 136 சிஎன்ஜி பேருந்துகளாகும்.
இந்த 300 புதிய பேருந்துகளின் சேவைகளை இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவற்றை ஆய்வு செய்தார். இதற்காக புதிய பேருந்துகள் அனைத்தும் சென்னை காமராஜர் சாலையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.
புதிய பேருந்துகளை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய் அவரது தொகுதியான பெரம்பூர் செல்லும் 29 A பேருந்தில் பயணித்தார். ஓட்டுனரிடம் பேசிய முதலமைச்சர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பின்னர், பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி சுமார் 5 கி.மீ இந்த பேருந்தில் பயணித்ததை அவர் தனது மொபைலில் வீடியோ எடுத்தார். முன்னதாக, தனக்கும் உடன் பயணித்த போக்குவரத்து துறை அமைச்சர், அரசு மூத்த அதிகாரிகள் அனைவருக்கும் அவர் நடத்துனரிடம் பயணச்சீட்டு கேட்டு வாங்கினார். பின்னர், மீண்டும் அதே பேருந்தில் தலைமைச்செயலகத்திற்கு திரும்பினார்.


