இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய (இசிபி) பாதுகாப்பு விதிமுறைகளின்படி, கூடுதல் பாதுகாப்பு மற்றும் தனியறை ஒதுக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் பெல்பாஸ்ட் நகரில் ஜூன் 26 மற்றும் ஜூன் 28ம் தேதி நடைபெற உள்ளன.
அதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடவுள்ளது.
இந்த நிலையில், சூர்யவன்ஷிக்கு கூடுதல் பாதுகாப்பு, தனியறை ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஐசிசி விதிமுறைகளின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வயது வந்த வீரர்களின் உடை மாற்றும் அறையை பயன்படுத்தக் கூடாது என்பதால் அவருக்கு தனி அறை வழங்கப்படுகிறது.
இருப்பினும், போட்டி மற்றும் அணி ஆலோசனைகளின் போது அவர் இந்திய அணியினருடன் இருக்க அனுமதிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
மேலும், சூர்யவன்ஷியின் சிறு வயது மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, அவரது பெற்றோர் இந்தச் சுற்றுப்பயணம் முழுவதும் அவருடன் தொடர்ந்து பயணிப்பார்கள். அவர்கள் இந்திய அணி வீரர்கள் தங்கும் அதிகாரப்பூர்வ ஹோட்டல்களில் தங்க உள்ளனர்.
இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி உடைய பெற்றோரின் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணம் மற்றும் தங்குமிடச் செலவுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்றும் சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் அமர்க்களப்படுத்திய சூர்யவன்ஷி, முதல் முறையாக சீனியர் அணிக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமாக உள்ள அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களிலும் அதிரடியைத் தொடர்வாரா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


