தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 7 மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தமிழக கடலோர பகுதிகளின் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
நாளை (26.6.26) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், வரும் 28ம் தேதி விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


