சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அறுதி பெரும்பான்மை இல்லாததால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்கப்பட்டு, முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.
பதவியேற்பின் போது, தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை கடந்த 16ம் தேதி நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் வெளியிட்டார். அதில், தமிழ்நாடு 13 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, மின்சாரத்துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
அதன்படி, சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று வெளியிட்டார்.
மின்சாரத்துறை வெள்ளை அறிக்கையில், மின் துறையில் மொத்த பணியிடங்கள் 1,40,635. அதில் 74,714 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 65,921 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தாலும், மக்களுக்கு சிக்கல் இல்லாமல் சேவை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சிகாலத்தில் 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதே கால கட்டத்தில் 9,136 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த வருடங்களில் 2 மடங்காக உயர வேண்டிய வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும் வளர்ச்சியை நோக்கி எந்த ஒரு திட்டமும் துவங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 4 பேர் செய்யவேண்டிய வேலையை ஒருவர் செய்கிறார்கள். 30 ஆண்டுகள் பின்னோக்கி போய் விட்டதாகவும், தி.மு.க. ஆட்சியில் எடுக்காமல் விட்ட 5,391 பணியாளர்களுடன் சேர்த்து 20,449 பேரை புதிதாக பணிக்கு அமர்த்தப்படவுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2021 முதல் 2026 திமுக ஆட்சியில் ரூ.4,97,996 கோடி வருவாய், ரூ. 5,32,443 கோடி செலவு, ரூ. 34,447 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய அனல் மின் நிலையம் மற்றும் நீர்மின் நிலையம் கடந்த அரசு உருவாக்கவில்லை. சோலார் திட்டம் பெறுபவர்கள் கட்சி நிதி (Party fund) கொடுத்துள்ளனர்.
2021 முதல் 2026 ஆம் ஆண்டில், மின்வாரியத்திற்கு கூடுதல் வருவாய் சுமார் ரூ.67 ஆயிரம் கோடி. கடைசி ஓராண்டில் மட்டும் (2025 முதல் 2026) ரூ.1.24 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம், 2021 முதல் 2026 ஆம் ஆண்டில், திமுக ஆட்சி காலத்தில் மின்வாரியத்தின் கடன் ரூ.87 ஆயிரம் கோடி உள்ளது. இவ்வளவு வரவு இருந்து, செலவும் செய்து, கடனும் வாங்கி உள்கட்டமைப்புகள் பெரிதாக மேம்படுத்தப்படவில்லை. மொத்தம் 4,47,603 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. அதில், 25 ஆண்டுகளை கடந்துள்ள 42,808 டிரான்ஸ்பார்மர்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது.
மின்வாரியத்தில் பணிமாறுதல் வேண்டி யாரும் பணம் கொடுக்க வேண்டாம். நிர்வாக காரணம் என்ற பெயரில் இடமாற்றம் இனி நடைபெறாது. வருடத்திற்கு இரண்டு முறை பணிமாறுதல் கவுன்சலிங் நடத்தப்படும் என்று மின்சாரத் துறை வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


