தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதே வேளையில், நேற்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
அந்த வகையில், அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மதுரை நகர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 103 டிகிரி ஃபாரன்ஹீட், மேலும், திருச்சி விமான நிலையம், கடலூர், வேலூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாகக் கூறியுள்ளது.
மேலும், ஈரோடு, திருத்தணி, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும் வாட்டியதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரியிலும் வெயில் சதம் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


