தமிழகத்தின் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை பொதுமக்கள் – தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ளும் திட்டத்திற்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியிருந்த தமிழ்நாடு அரசு, தற்போது அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் குப்பை சேகரிப்பு, கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பராமரிப்பு பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ளும் நோக்கில், பொதுமக்கள் – தனியார் பங்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வந்தது.
இதற்காக திட்டத்தின் செயல்திறன், நிதி சாத்தியக்கூறுகள் மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநகராட்சிகளில் தூய்மை பணிக்கு குடியிருப்பாளர்களிடம் தனி தொகையை வசூலித்துக் கொண்டு தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதற்கு தூய்மை பணியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி தூய்மை பணியை தனியார் மயமாக்க பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. தேர்தலுக்கு முன் ஒரு பேச்சா, பின் ஒரு பேச்சா என தவெக அரசின் கூட்டணி கட்சிகளும் விமர்சித்திருந்தன.
அதுமட்டுமின்றி, பெரும்பாலான தூய்மை பணியாளர்கள் தலித் மற்றும் சிறுபான்மையினர் சமூகத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை தனியார் மயமாக்குவது சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதற்காக விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் போராட்டம், கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் தவெக அரசு தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


