தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. அதே போல், ஊடகங்களும் திமுகவே வெற்றி பெறும் எனவும் தவெகவுக்கு ஓரளவு வாக்கு சதவீதம் கிடைக்க கூடும் என்றும் கூறி வந்தன.
ஆனால், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதி அத்தனை கருத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி, இறுதியில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
திமுக தலைமையிலான கூட்டணி 73, அதிமுக கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன. இதையடுத்து, திமுக எதிர்க்கட்சியானது.
இத்தேர்தலில், திமுக தோற்றதைக் கடந்து மற்றொரு அதிர்ச்சியும் அக்கட்சித் தொண்டர்களுக்கு காத்திருந்தது. அது சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அத்தொகுதியின் எம்எல்ஏவும் அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியைத் தழுவியதே ஆகும். இந்நிகழ்வு திமுகவினரை மட்டுமின்றி, பல்வேறு துறை சார்ந்த அனைத்து கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்தசூழலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க போதிய அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அமைத்தது.
முதலில் வெளியில் இருந்து ஆதரவு என தெரிவித்த ஐயூஎம்எல் மற்றும் விசிக தற்போது அமைச்சரவையில் பங்கேற்றுள்ளன. இதனை திமுக மூத்த நிர்வாகிகள் அவ்வபோது கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருந்த நிலையில், திருச்சி கிழக்கை அவர் ராஜினாமா செய்தார். அதேபோல, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருக்கும் 5 தொகுதிகள் உட்பட விரைவில் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் “இடைதேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” என விளக்கம் அளித்தார்.


